‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சேறும், சகதியுமாக இருந்த சாலை சரி செய்யப்பட்டது

‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியாக சேறும், சகதியுமாக இருந்த சாலை சரி செய்யப்பட்டது.

Update: 2020-11-20 13:15 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தற்போது நான்கு வழிச்சாலை விரிவாக்கம் தொடர்பான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பஸ் நிறுத்தத்தின் வழியாக சென்றது. இதனால் பஸ் நிறுத்த பகுதியில் கழிவுநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர் சிதறி பயணிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது தெறித்ததால், அவர்களுடைய உடைகளில் கறையாக படிகிறது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் பயணிகள் வீட்டிற்கு சென்று வேறு உடைகளை அணிந்து கொண்டு, வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் உடனடியாக ஆழ்துளை கிணற்றில் இருந்து சேறும், சகதியுமாக வரும் கழிவுநீரை வேறு பகுதிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், பயணிகள் மீது சேறு, சகதி தெறிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் பயணிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகளின் நடவடிக்கையால் சேறும், சகதியுமாக இருந்த சாலையில் தார் மற்றும் ஜல்லி கலந்த கலவை கொட்டப்பட்டு, கழிவுநீர் தேங்காத வகையில் சாலை சரி செய்யப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பயணிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்