பேரணாம்பட்டு அருகே மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

பேரணாம்பட்டு அருகே மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-11-30 03:41 GMT
பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகில் உள்ள பத்தலபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22), கட்டிட மேஸ்திரி. இவருக்கும், தாய் மாமன் மகளான சுப்புலட்சுமி (19) என்பவருக்கும் 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி பேரணாம்பட்டுக்கு கட்டிட வேலைக்காக சென்ற யுவராஜ் மாலை வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டில் இருந்த மனைவிக்கும், அவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. அதில் சுப்புலட்சுமி தனது கணவர் யுவராஜை செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த யுவராஜ் அருகில் கிடந்த இரும்பு ஊதுகுழலால் மனைவியை நெற்றியில் சரமாரியாக அடித்துக் கொலை செய்தார். மனைவி கொலை வழக்கில் யுவராஜை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தற்கொலை

கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி கோர்ட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த யுவராஜ் 5 நாட்களாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். சிறையில் இருந்து வெளியில் வந்த யுவராஜ் தனது மனைவியை கொலை செய்து விட்டோமே என நினைத்து மனவேதனையில் தினமும் வீட்டில் கதறி துடித்துள்ளார்.

அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி, சமரசம் செய்தனர். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வீடு திரும்பிய யுவராஜ் மனமுடைந்து இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்