வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற பஸ்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடின

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்கவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அதனால் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட அரசு, தனியார் பஸ்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-11-30 03:52 GMT
வேலூர்,

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவை காணவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் மக்கான் தற்காலிக பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதில், தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே 29, 30 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும், வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பஸ்கள் வெறிச்சோடின...

அதன் காரணமாக வேலூரில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களை விட குறைந்த அளவே திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன. ஆனாலும் அந்த பஸ்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே பயணம் செய்தனர். பயணிகள் இன்றி பஸ்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

வெளியூர் பக்தர்களை திருவண்ணாமலை நகருக்குள் போலீசார் அனுமதிப்பது இல்லை. எனவே வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டாம். திருவண்ணாமலை நகரை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற நபர்கள் நகர எல்லையில் இறக்கி விடப்படுவார்கள் என்று கண்டக்டர்கள் அறிவுறுத்தினர். வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 33 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 33 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் போலீசார் வழங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பஸ்கள் மட்டுமே திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் வரை அனுமதிக்கப்படுகிறது. பஸ்களில் குறைவான நபர்களே பயணம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) பயணிகளின் வருகையை பொறுத்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கப்படும், என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்