அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-30 23:03 GMT
அரியலூர்,

அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 125 பேர் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஜெயங்கொண்டம், திருமானூர், அரியலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் நான்கு வருடங்களாக பணிபுரிபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த தொகையை அவர்களுக்கு தேவைப்படும்போது தரவில்லை என்றும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும்போது நான்கு வகைகளாக குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் உத்தரவிடுவதாகவும், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து குப்பைகளை யாரும் தரம்பிரித்து தராமல் சாலைகளில் கொட்டி விடுவதால், அவற்றை அள்ளி தரம்பிரிக்க நேரமாகிவிடுகிறது என்றும், பணிகளை வரன்முறைப்படுத்த வலியுறுத்தியும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

பணத்தை விரைவில்...

இதில் 50 பெண்கள் உள்பட 125 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்ததாரரிடம் இருந்து அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை விரைவில் பெற்றுத் தருவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்