ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுத்த செல்போனை தொலைத்ததை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை

ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுத்த செல்போனை தொலைத்ததை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-02 23:11 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள படைநிலை முதலியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), கூலித்தொழிலாளி. இவருடைய மகள் நட்சத்திரவள்ளி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக கணேசன் மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இந்தநிலையில் நட்சத்திரவள்ளி செல்போனை தொலைத்து விட்டாராம். இதைஅறிந்த கணேசன் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த செல்போனை தொலைத்துவிட்டாயே என கூறி மகளை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நட்சத்திரவள்ளி கடந்த 23-ந்தேதி மாலை குண்டுமணி என்ற விஷ விதையை தின்று மயங்கினார்.

சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நட்சத்திர வள்ளி இறந்தார். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்