அரசு சிமெண்டு ஆலையில் நிரந்தர பணி கேட்ட ஆனந்தவாடி கிராம மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் அமைச்சர் தகவல்

அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக, அந்த கிராம மக்களுடனான ஆலோசனை கூட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

Update: 2020-12-03 23:20 GMT
அரியலூர்,

கூட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் ராமஜெயலிங்கம் (ஜெயங்கொண்டம்), ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்நாடு சிமெண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் சம்பத் பேசுகையில், அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்கான சுண்ணாம்புக்கல் ஆனந்தவாடி கிராமத்தில் இருந்து எடுப்பதற்காக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், அரியலூர் சிமெண்டு ஆலையில் நிரந்தர பணி தங்களுக்கு கட்டாயமாக தரப்பட வேண்டும் என்று ஆனந்தவாடி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை ஏற்பதில் உள்ள சட்ட விதிமுறைகள் அடிப்படையில், அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எடுத்துரைக்கப்பட்டது, என்றார்.

இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 2 ஆயிரத்து 625 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதை, அமைச்சர் எம்.சி.சம்பத் கால்நடை பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள், வெள்ளாடுகளை வழங்கி தொடங்கி வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து, அவர் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 995 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் நலவாரிய திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு நிதியுதவி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள்.

கூட்டம் மற்றும் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர் பூங்கோதை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவா்கள் மகாலெட்சுமி (தா.பழூர்), மருதமுத்து (ஆண்டிமடம்), இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு துறை) ஹமீதுஅலி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்