பொன்னேரி அருகே துணிகரம்: விவசாயி வீட்டில் புகுந்து 104 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை; தனிப்படை போலீசார் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

பொன்னேரி அருகே விவசாயி பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 104 பவுன் தங்க நகைகள் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2020-12-05 05:28 IST
விவசாயி
பொன்னேரி அருகே உத்தண்டி கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் முனிநாதன் (வயது 52). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மனைவியின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக முனிநாதன் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்பு இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வெளியில் இருந்த இரும்புக்கதவு திறக்க முடியாமல் உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, அவர் வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை
இதனால் பதறிப்போன முனிநாதன் உள்ளிட்ட குடும்பத்தினர், வீட்டிற்குள் சென்று அங்கு இருந்த பீரோவை பார்த்தனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 104 பவுன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1½ லட்சத்து ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். அவர்களை பிடிக்க இந்த தனிப்படை, போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தால் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்