கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - கணக்கில் காட்டாத ரூ.50 ஆயிரம் பறிமுதல்
கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் காட்டாத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.;
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் அலுவலகம் செயல்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த அலுவலகத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்திற்குள்ளும், அலுவலக வளாகத்தில் நின்ற வட்டார போக்குவரத்து அதிகாரியின் காரிலும் தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசனிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.