வேலூரில் கல்வி உதவித்தொகை வாங்தி தருவதாக கூறி பணமோசடி செய்த மதபோதகர் கைது

கல்வி உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்தை மோசடி செய்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-12-26 23:47 GMT
விக்டர் ஜேசுதாசன்
கூலித்தொழிலாளி
வேலூரை அடுத்த காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). கூலித் தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

வேலூர் சலவன்பேட்டை அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த விக்டர் ஜேசுதாசன் (58) என்பவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படுவதாக குமாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் குமார், விக்டர் ஜேசுதாசனை சந்தித்து தனது மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தர கேட்டுக் கொண்டார். அதற்கு ரூ.20 ஆயிரம் செலவாகும் என விக்டர்ஜேசுதாசன் கூறி உள்ளார். பின்னர் குமார் பணத்தை கொடுத்துள்ளார். இதேபோல் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களும் பணம் கொடுத்துள்ளனர்.

ஆபாசமாக பேசி மிரட்டல்
இந்த நிலையில் கல்வி உதவித்தொகை வாங்கி தராததால் கொடுத்த பணத்தை குமார் திருப்பி கேட்டுள்ளார். அப்போது விக்டர்ஜேசுதாசன் காசோலையை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காசோலையை பெற்றுக் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை, எனத் திரும்பியது. அதிர்ச்சி அடைந்த குமார் இதுகுறித்து அவரிடம் கேட்டார். அப்போது விக்டர் ஜேசுதாசன், குமாரை ஆபாசமாக பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து விக்டர் ஜேசுதாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினியிடம் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர்கள் இலக்குவன், கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

கைது
விசாரணையில் விக்டர் ஜேசுதாசன் நடத்தி வந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு நபர்களிடம் கல்வி உதவித்தொகை, வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் போன்றவை வாங்கி தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், விக்டர்ஜேசுதாசன் பலரிடம் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி உள்ளார். வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர், மதபோதகராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம், என்றனர்.

மேலும் செய்திகள்