தர்மேகவுடா மறைவுக்கு எடியூரப்பா உள்பட தலைவர்கள் இரங்கல் காங்கிரசார் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என குமாரசாமி அறிவுரை

கர்நாடக மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரசார் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குமாரசாமி அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2020-12-31 00:19 GMT
பெங்களூரு, 

கர்நாடக மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா நேற்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா மறைந்தார் என்ற செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த செய்தியை நம்ப முடியவில்லை. தனது சிறப்பான செயல்பாடுகளால் மக்களிடம் நன்மதிப்பை பெற்ற தர்மேகவுடா மறைவு பெரும் துக்கத்தை ஏற்படுத்துகிறது. மூத்த அதிகாரிகளிடம் இருந்து அவர் இறந்தது குறித்த விவரங்களை பெற்றுள்ளேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அவரது இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்குமாறு இறைவனிடம் வேண்டுகிறேன். இவ்வாறு எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா எனது நண்பர். அவரது தந்தை காலத்தில் இருந்தே அவரது குடும்பத்துடன் எனக்கு நெருக்கம் இருந்தது. அடிமட்டத்தில் இருந்து அவர் அரசியல் செய்து, மக்கள் சேவையாற்றினார். விவசாயிகள், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை கொண்டவராக இருந்தார். அவரது மறைவு மக்களுக்கு பேரிழப்பு. அவரது ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும்" என்றார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா, தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எளிமையான, ஒழுக்கமான ஒரு மேல்-சபை துணைத்தலைவரை நாம் இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை வழங்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாக்கடை கலந்த, கொள்கை-கோட்பாடுகளற்ற சுயநலமிக்க அரசியலால் நடந்த தற்கொலை ஆகும். மேல்-சபை தலைவர் பதவிக்காக ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு மதசார்பற்ற கொள்கை பரீட்சை நடத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வில் தர்மேகவுடா என்ற நல்ல இதயம் படைத்தவரின் உயிர் போயுள்ளது. தேர்வை நடத்தியவர்களுக்கு இப்போது பதில் கிடைத்திருக்கும். இதன் மூலமாவது அவர்கள் (காங்கிரசார்) சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தர்மேகவுடா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி, சட்டசபை சபாநாயகர் காகேரி, துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் மற்றும் மந்திரிகள், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்