பல்லாவரம் ரேடியல் சாலையில் புத்தேரியில் இரவோடு இரவாக குப்பைகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள புத்தேரியில் இரவோடு இரவாக குப்பைகள் கொட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-31 00:43 GMT
புத்தேரி புனரமைப்பு
சென்னையை அடுத்த பல்லாவரத்தில், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி இரண்டு பகுதிகளாக புத்தேரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.

இதையடுத்து பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெற்கு பகுதியில் உள்ள ஏரி புனரமைக்கப்பட்டது. வடக்கு பகுதியில் உள்ள ஏரியை, பல்லாவரத்தை சேர்ந்த ‘பசுமை பெருக சுத்தம் செய்’ என்ற அமைப்பு, பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரி ஆழப்படுத்தியது.

சமீபத்தில் பெய்த மழையால் புத்தேரியின் இரண்டு பகுதிகளிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

குப்பைகள் கொட்டினர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வடக்கு பகுதியில் உள்ள புத்தேரியில், மர்ம கும்பல் ஒன்று இரவோடு இரவாக லாரியில் சுமார் 30 லோடு குப்பைகளை எடுத்து வந்து கொட்டியது.

நேற்று காலை அந்த வழியாக நடைபயிற்சி சென்ற பொதுமக்கள், ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதை அறிந்து அங்கு கூடினர். பின்னர் குப்பை கொட்டியதை கண்டித்தும், மர்மநபர்களை கைது செய்யக்கோரியும் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி அதிகாரிகள் உறுதி
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பல்லாவரம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏரிக்கு எதிரே, போலீஸ் உதவி மையம் உள்ளது. அப்படி இருந்தும் குப்பை கொட்டப்பட்டு உள்ளதால், போலீசார் துணையுடன் இச்செயல் நடந்ததாக நீர்நிலை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றுவதாக, நகராட்சி அதிகாரிகள் உறுதி கூறினர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்பிறகு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்