ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது ரூ.4 லட்சம், கார் பறிமுதல்

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 4 லட்சம் ரொக்கம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-12-31 02:31 GMT
நெட்டப்பாக்கம், 

நெட்டப்பாக்கம் அடுத்த செம்படபேட்டை புதுநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது49). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 18-ந் தேதி இரவு புதுச்சேரிக்கு சென்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, கல்மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே இரவு 7 மணியளவில், செம்படபேட்டையைச் சேர்ந்த சக்திவேல், கார்த்திக், பார்த்திபன், ராமரெட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவா ஆகியோர், ஆறுமுகத்தை கடத்திச் சென்றனர்.

அதன்பிறகு ஏற்காடு, சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லாட்ஜில் அறை எடுத்து அடைத்து வைத்து, ஆறுமுகத்தை மிரட்டி ரூ.15 லட்சத்தை பறித்துக் கொண்டனர்.

அவர்களிடம் இருந்து கடந்த 25-ந் தேதி ஆறுமுகம் தப்பித்தார். அவரது புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நெட்டப்பாக்கம் ஏரிக்கரையில் தலைமறைவாக இருந்த சக்திவேல், பார்த்திபன், ரஞ்சித், சிவா, கார்த்திக் ஆகியோரை நேற்று முன்தினம் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில், ஆறுமுகத்தை மிரட்டி ரூ.15 லட்சம் பறித்துக் கொண்டதும் அந்த பணத்தில் கடத்தல்காரர்கள் புதிதாக கார் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்த ரூ. 4 லட்சம் ரொக்கம், கார், இருசக்கர வாகனம், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கொரோனா பரிசோதனைக்குப் பின் அவர்கள் 5 பேரையும் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்