வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி - பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பர்கூர், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-31 13:32 GMT
பர்கூர்,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ேபாராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி வரவேற்று பேசினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. மேகநாதன், மாநில துணை பொதுச்செயலாளர் இளங்கோ ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக கட்சி நிர்வாகிகள் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் கலைவாணி மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பர்கூர் நகர செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

ஓசூரில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் தேவராஜன், வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் மாநில துணை செயலாளர் கனல் கதிரவன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட அமைப்பு செயலாளர் விசுவநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் அருண்ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரனிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்