மத்திய அரசின் மகளிர் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் ஜனாதிபதியால் தேசிய விருது வழங்கப்படவுள்ளது.

Update: 2021-01-02 22:53 GMT
அரியலூர்,

மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்தல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு-சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு ‘மகளிர் சக்தி விருது' என்னும் தேசிய விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிழ் வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.narishaktipuraskar.wcd.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் இவ்விருதிற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக வருகிற 7-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் ஜனாதிபதியால் தேசிய விருது வழங்கப்படவுள்ளது.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்