சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே கடற்படை அதிகாரியின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2021-01-04 07:47 IST
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 65). ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி. ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னை வந்த தனது மகளை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அஜித்குமார் நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு தனது காரில் வந்து கொண்டிருந்தார்.

சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள சிக்னல் அருகே வரும்போது, திடீரென அவரது காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், உடனடியாக காரை நிறுத்தினார். அதற்குள் கார் தீப்பிடித்து மளமளவென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

தீயை அணைத்தனர்

இதைக்கண்ட அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டனர். பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். வேப்பேரி மற்றும் சென்னை ஐகோர்ட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, காரில் எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் அஜித்குமார் காயமின்றி உயிர் தப்பினார். எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே, நள்ளிரவில் சாலையில் வந்து கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்