காஞ்சீபுரம் வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Update: 2021-01-07 00:09 GMT
வெள்ளம் சூழ்ந்தது
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் கடந்த 2015- ம் ஆண்டு ஏற்பட்ட மழையால் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வரதராஜபுரம், ஆதனூர் போன்ற பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதனை தொடர்ந்து வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு அடையாற்றின் கரையோர பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாய்களை சீரமைத்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து படப்பையை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள முல்லை நகர், கிருஷ்ணா நகர், ராயப்பா நகர், பரத்வாஜ் நகர். புவனேஸ்வரி நகர், பாலாஜி நகர், சாந்தி நிகேதன் நகர் உள்ளிட்ட பல் வேறு நகர்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கி வடியாமல் காணப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். தொடர்ந்து படிப்படியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழை வெள்ளத்தை வெளியேற்றினர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வரதராஜபுரம் பகுதியில் உள்ள பாலாஜி நகர். பி.டி.சி. நகர், மகாலட்சுமி நகர், புவனேஸ்வரிநகர், சாந்தி நிகேதன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

6 ஆண்டுகளாக...
அடையாறு ஆற்றின் கரை தாழ்வாக உள்ள பகுதியில் ஆற்றில் செல்லும் நீர் குடியிருப்பு பகுதிகளில் வந்து விடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பாம்பு, விஷ பூச்சிகள் வந்து செல்கிறது. குடியிருப்பு பகுதியில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வெள்ளம் வடியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில:-

அடையாறு கால்வாயை மேலும் அகலப்படுத்தியும் கரையை பலப்படுத்தியும் கரை தாழ்வாக உள்ள பகுதிகளில் கரையை உயர்த்தியும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும கடந்த 6 ஆண்டுகளாக மழைக்காலம் வந்தால் வரதராஜபுரம் பகுதியில் இதே நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வே இல்லாமல் இருப்பதும் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நேரத்தில் அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வெள்ளத்தை வெளியேற்றுவதும் வாடிக்கையாகி விட்டது.

இவ்வாறு அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செம்மஞ்சேரி
கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் செம்மஞ்சேரி ஜவஹர் நகர், எழில் முக நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் பலத்த மழை மற்றும் புயல் வரும்போது இந்த பகுதிகளில் மற்றும் இந்த பகுதியை சுற்றியுள்ள தாழம்பூர், செம்மஞ்சேரி சுனாமி நகர் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழும் நிலையானது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழை வெள்ளம் செல்ல கால்வாய் அமைத்து மழைக்காலங்களில் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்