என்.எல்.சி.யில் வேலைக்கேட்டு நெய்வேலியில் பேரணி சென்ற பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் 445 பேர் கைது

என்.எல்.சி.யில் வேலைக்கேட்டு நெய்வேலியில் பேரணி சென்ற பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் 445 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இரவிலும் திருமண மண்டபங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2021-01-07 11:57 IST
நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகள், என்.எல்.சி.யில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வாரிசுகள் ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு, என்.எல்.சி.யில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெற்றனர்.

இதனடிப்படையில் மொத்தம் சுமார் 8 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் நிரந்தரதன்மையுடைய வேலை வழங்கிட வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

445 பேர் கைது

இந்த நிலையில் நேற்று, நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள பொதுக்கூட்ட திடலில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியாக பொதுக்கூட்ட திடலுக்கு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா தலைமையலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, 445 பேரை கைது செய்தனர். தொடர்ந்து 27 மற்றும் 29-வது வட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

முன்னதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கலைச்செல்வன், பாலகிருஷ்ணன், குணசேகரன், குமரவேல் உள்ளிட்டோர் கூறுகையில், என்.எல்.சி. நிர்வாகம் தன்னுடைய வேலைக்கு தேவை படும் விதமாக பயிற்சி பெற்ற ஐ.டி.ஐ. பிரிவை மாற்றியும், பயிற்சி பெற வேண்டிய காலத்தை அதிகரித்தும் மாற்றி அமைத்துக்கொண்டது. இதனால் அவர்களால் பிற நிறுவனங்களில் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே என்.எல்.சி. நிர்வாகம் தங்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இதற்கிடையே கைதானவர்கள் திருமண மண்டபங்களில் உணவு சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது, கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.

அப்போது, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான சி.ஐ.டி.யு. மற்றும் தொ.மு.ச. தலைமை நிர்வாகிகள் எங்களுடன் வரவேண்டும் என்று கூறி பேச்சுவார்த்தைக்கு செல்ல போராட்டக் குழு வினர் மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் மாலையில் போலீசார் அவர்களை விடுதலை செய்தனர். ஆனால் தங்களுக்கு ஒரு தீர்வு காணாமல் செல்லமாட்டோம் என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் இரவு 8 மணிக்கு நிர்வாக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்படி என்.எல்.சி. நிர்வாக தரப்பில் செயல்இயக்குனர் சதீஷ்பாபு, முதன்மை பொது மேலாளர் தியாகராஜூ, சி.ஐ.டி.யு., தொ.மு.ச. நிர்வாகிகள் மற்றும் போராட்டக்குழுவினர் 5 பேரும் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். பேச்சுவார்த்தை இரவு 10.30 மணியை கடந்தும் நடந்தது. இதனால் உள்ளிருப்பு போராட்டமும் 2 திருமண மண்டபங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி என்று பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

இந்நிலையில் இரவு 11 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்தது. அதில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டதாக பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக இவர்களது உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்