கந்தம்பாளையத்தில், வாலிபர் குத்திக்கொலை - தாய், கள்ளக்காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு

கந்தம்பாளையத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரின் தாய், கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-01-07 14:16 GMT
கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கந்தம்பாளையம் வாழ்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராணி (வயது 50). இவரது மகன் வெள்ளையன் (30). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (30). முடி திருத்தும் தொழிலாளி. இவர்கள் 2 பேரின் குடும்பத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ேநற்று முன்தினம் இரவும் இவர்களுக்குள் தகராறு நடந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வாழ்நாயக்கன்பாளையத்தில் சரஸ்வதி நகர் என்ற இடத்தில் ஒரு வீட்டு மனை நிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் 6 இடங்களில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வேலூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிணமாக கிடந்தது ராணியின் மகன் வெள்ளையன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது ராணியின் வீடு மற்றும் சுப்பிரமணியின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இருவரையும் காணவில்லை. இதையடுத்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி வந்துவிட்டது. பின்னர் போலீசார் பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ராணிக்கும், சுப்பிரமணிக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதை ராணியின் மகன் வெள்ளையன் கண்டித்து வந்ததாகவும், இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பதால் வெள்ளையன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவான ராணியையும், சுப்பிரமணியையும் நல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்