அரியலூரில் பரபரப்பு: கோர்ட்டு அறையில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

அாியலூரில் கோர்ட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2021-01-08 00:21 GMT
அரியலூர்,

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள குடும்பநல கோர்ட்டு, வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கோர்ட்டில் தலைமை நிர்வாகியாக வேலை பார்த்து வந்தவர் நெடுஞ்செழியன்(வயது 58). இவரது சொந்த ஊர் கீழ பெரம்பலூர் ஆகும். நேற்று வழக்கம்போல் கோர்ட்டுக்கு வந்து அவர் வேலை பார்த்தார். மாலை 4 மணி அளவில் அவர் தனது அறைக்குள் சென்று, கதவுகளை பூட்டி உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார்.

இதையடுத்து மற்ற ஊழியர்கள் அறைக்கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் இது பற்றி நீதிபதிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஊழியர்கள் அறைக்கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் நெடுஞ்செழியன் பிணமாக தொங்கியதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடிதத்தை கைப்பற்றினர்

அங்கு விரைந்து வந்த போலீசார் கோர்ட்டு வாசலில் காவலுக்கு நின்றனர். மேலும் மாவட்ட அமர்வு கோர்ட்டில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த அறைக்குள் சென்று, நெடுஞ்செழியனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நெடுஞ்செழியனின் உடைகளை சோதனை செய்தபோது, அவருடைய சட்டைப்பையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில், கடந்த 2004ம் ஆண்டு எனக்கு உடல்நிலை முதலில் பாதிக்கப்பட்டது. பின்னர் வாகன விபத்தில் சிக்கி மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினேன். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல் எடை குறைந்தது. அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தேன். உடல் எடை குறைந்து கொண்டே வருவதால், எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்குமோ என்று நினைக்கிறேன். மேலும் வைத்திய செலவு செய்து கொண்டிருந்ததால் எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் வேதனை தருகிறது. எனது குடும்பத்தினர் என்னை நல்ல நிலையில்தான் பார்த்துக்கொண்டனர். இருப்பினும் மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்தேன், என்று கடிதத்தில் நெடுஞ்செழியன் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முகத்ைத காட்டாமல்

இதையடுத்து நெடுஞ்செழியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். அவரது முகம் தெரியாத அளவுக்கு உடல் முழுவதும் வெள்ளை துணியால் மூடப்பட்ட நிலையில் அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினார்கள். அப்போது நீதிமன்றத்தில் நெடுஞ்செழியனுடன் வேலை பார்த்த சக ஊழியர்கள், அவரது முகத்தை பார்க்க வேண்டும் என்று கதறி அழுதபடி கூறினர். ஆனால் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, அவர்களுக்கு முகத்தை காட்டாமல் எடுத்துச்சென்றனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோர்ட்டு கட்டிடம் உள்ள பெருமாள் கோவில் தெரு தினமும் ஏராளமானவர்கள் சென்றுவரும் பகுதி என்பதால், கோர்ட்டு வளாகத்தில் மக்கள் அதிகமாக கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். அதனால் போக்குவரத்து வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டது. கோர்ட்டு கட்டிடத்தில் உள்ள அறையில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்