சாம்ராஜ்நகர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி சாவு

சாம்ராஜ்நகர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை ேசர்ந்த 3 பேர் உடல் நசுங்கி செத்தனர். 14 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2021-01-09 00:56 GMT
கொள்ளேகால், 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 70). அவருடைய மனைவி அமராவதி (65). இவருடைய மகள் கோகிலா (42). சுப்பிரமணியம் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக வாடகைக்கு வேன் ஒன்றை அமர்த்தினர்.

இதையடுத்து அனைவரும் கணக்கம்பாளையத்தில் இருந்து வேனில் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டு மைசூருவுக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை அதே கிராமத்தை சே்ாந்த அருண் என்பவர் ஓட்டினார். வேனில் மொத்தம் 17 பேர் இருந்தனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி நடந்து கொண்டிருக்கிறது. மேலும் நேற்று தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த சாலையில் மூடள்ளி என்ற இடத்தில் உள்ள ஒரு சிறிய வளைவில் திரும்ப முயன்ற போது வேனும், எதிரே வந்த சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்து நடந்ததும் சரக்கு வேன் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் நிலைதடுமாறிய வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே வேனில் இருந்த அனைவரும் “அய்யோ, அம்மா” என்று அலறினர்.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சுப்பிரமணியம், அமராவதி, கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி செத்தனர். வேனில் இருந்த சந்திரன், சாந்தாமணி, சுகுணா, சுபிஷா, செண்பகம், மோகன், ஜெயபாரதி, யசோதா, செந்தில்குமார், சந்தோஷ், ஜெயலட்சுமி, துளசி, கீதா உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கர்நாடக மாநில ஆம்புலன்ஸ் மூலம் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் அறிந்து சாம்ராஜ்நகர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்த 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சாம்ராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்ற சரக்கு வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்