கடலூரில் பரபரப்பு: கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் ஒத்திகை - பொதுமக்கள் முன்னிலையில் தத்ரூபமாக நடித்தனர்

கடலூரில் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ஒத்திகை பார்த்தனர். இந்த ஒத்திகையை பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.;

Update:2021-01-09 22:05 IST
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றால், அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து புதிதாக பணியில் சேர்ந்த ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி மற்றும் ஒத்திகை அளிக்க போலீசார் முடிவு செய்தனர்.

வழக்கமாக இது போன்ற ஒத்திகை உள் மைதானத்தில் நடைபெறும். ஆனால் இந்த ஒத்திகையை பொதுமக்கள் மத்தியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று மாலை கடலூர் மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் எதிரில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பாரதிசாலையில் இந்த ஒத்திகையை போலீசார் நடத்தினர். சிறுவர் பூங்கா முதல் டவுன் ஹால் வரை சாலை அடைக்கப்பட்டது. இதற்காக போலீசாரில் 2 குழுவினர், கலவரக்காரர்கள் போல் கையில் அரிவாள், உருட்டு கட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை ஏந்தியபடி ஒரு புறமும், மற்றொரு புறம் சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காகவும் போலீசாரும் பெண் போலீசாரும் நிறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சியை தொடங்கினர். அப்போது கலவரக்காரர்கள் தாக்கிக்கொள்வது போல் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கி கொள்வது போலவும், கத்தியால் குத்துவது போலவும் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். அதன்பிறகு சீருடை அணிந்த போலீசார் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது போலவும், ஆனால் கலவரக்காரர்களாக இருக்கும் போலீசார் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்கின்றனர். அவர்கள் சிறிது தூரம் ஓடிச்சென்று மீண்டும் மோதலில் ஈடுபடுகின்றனர். இதனால் போலீசார் அவர்களை நோக்கி கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனமான வருண் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

ஆனால் அவர்கள் மீண்டும் வந்து, போலீஸ்காரர் ஒருவரை தாக்கி, கத்தியால் குத்துவது போல் ஒத்திகை செய்கின்றனர்.

இதில் அந்த போலீஸ்காரர் கீழே விழுந்ததும், வேறு வழியின்றி போலீசார் முதலில் வானத்தை நோக்கியும், பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் போலி குண்டுகளை போட்டு துப்பாக்கியால் சுடுகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் கலவரக்காரர் ஒருவர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்து விடுவது போல் நடித்து காட்டினார்.

இதை பார்த்ததும் கலவரக்காரர்கள் போல் நடித்த போலீசார் நாலாபுறமும் சிதறி ஓடி விடுகின்றனர். அப்போது பொது சொத்தை சேதப்படுத்தி தீ வைத்து கொளுத்துகின்றனர். இதை தீயணைப்பு வீரர்கள் வந்து அணைக்கின்றனர்.

இவ்வாறு அனைத்து ஒத்திகையையும் போலீசார் மிக தத்ரூபமாக செய்து காட்டி முடித்தனர். இந்த ஒத்திகையின் போது உண்மையிலேயே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். அவரை சக போலீசார் மீட்டனர்.

இந்த ஒத்திகையை அந்த வழியாக சென்ற ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். பெரும்பாலானோர் தங்கள் செல்போனில் அனைத்து நிகழ்ச்சிகளையும் படம் பிடித்தனர்.

ஒத்திகை நிகழ்ச்சி என்பதை அறியாத சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதும் உண்மையிலேயே கலவரம் நடந்து விட்டதாக எண்ணி சிதறி ஓடியதையும் பார்க்க முடிந்தது. 30 நிமிடம் நடந்த ஒத்திகையால் கடலூர் பாரதிசாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இருப்பினும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுஸ்ரீஅபிநவ் கூறுகையில், மாவட்டத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் புதிதாக பணியில் சேர்ந்த ஆயுதப்படை போலீசார் உள்பட 145 போலீசார் ஈடுபட்டனர்.

இது தவிர 108 ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வீரர்கள் இணைந்து செயல்பட்டனர். பொதுமக்களுக்கு நம்பிக்கைக்கையை ஏற்படுத்தவும், புதிதாக பணியில் சேர்ந்த போலீசாருக்கு பதற்றத்தை போக்கவும் இந்த ஒத்திகை திறந்த வெளியில் நடத்தப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்