பொங்கல் சீர்வரிசை கொடுக்க சென்ற போது விபத்து: நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதல்; சமையல் மாஸ்டர் பலி மகன்-மகள் படுகாயம்

பொங்கல் சீர்வரிசை கொடுக்க ெசன்றபோது நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதியதில் சமையல் மாஸ்டர் பலியானார். அவரது மகனும், மகளும் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-01-13 23:01 GMT
கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). சமையல் மாஸ்டரான இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளை கடலூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மருமகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தந்தை வீட்டுக்கு மகள் வந்திருந்்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சம்பந்தி வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொடுப்பதற்காக அதற்கான பொருட்களுடன் மகன் விக்னேஸ்வரன் மற்றும் மகளுடன் நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சாத்தமங்கலம் அருகே அவர்கள் சென்றபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதியது.

சமையல் மாஸ்டர் பலி

இந்த விபத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது மகன், மகள் என 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மகன் மற்றும் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசன் மகன், மகளுடன் ஸ்கூட்டரில் சென்றபோது மிதமான மழை பெய்து கொண்டிருந்ததாலும், சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் லாரி நின்றது தெரியாமல் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இன்று(வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட இருந்த நிைலயில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கியது உறவினர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்