பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மோசடி வழக்கு குற்றவாளியின் செல்போன், நகையை அபகரித்ததாக குற்றச்சாட்டு

சென்னையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, குற்றவாளியின் நகை மற்றும் செல்போனை அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-01-14 01:33 GMT
சென்னை, 

சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் உள்ளவர் ஞானசெல்வம் (வயது 55). இவர் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜசிம்மன் நாயுடு (வயது 46) என்பவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி பழகி, ரூ.25 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகார் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜசிம்மன் நாயுடு மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்து விட்டார்.

ராஜசிம்மன் நாயுடு சிறைக்கு அனுப்பப்பட்டபோது, அவரிடம் பறிமுதல் செய்த செல்போன், 2 பவுன் நகை மற்றும் ஏ.டி.எம்.கார்டு போன்றவற்றை இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் அபகரித்துக்கொண்டதாக புகார் எழுந்தது. ஆனால் அவற்றை திருப்பி கொடுத்து விட்டதாக ஞானசெல்வம் தெரிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு

இருந்தாலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதால், ஆயிரம் விளக்கு போலீசார் பெண் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் மீது மோசடி உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும், உரிய விசாரணை நடத்தப்பட்டு, புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்