ராமநாதபுரத்தில் பரபரப்பு: பாதாள சாக்கடை கழிவுநீர் அருகே உட்கார்ந்து எம்.எல்.ஏ. திடீர் தர்ணா

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்றக்கோரி டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ. திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி ஊழியர்கள் லாரியை வரவழைத்து கழிவுநீரை அகற்றினர்.

Update: 2021-01-16 14:05 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது அடைமழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் நகரில் நகரசபை பகுதி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. நகரசபை பகுதிகளில் மழைவெள்ளநீருடன் பாதாள சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து கடும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.

கழிவுநீரை அகற்ற கோரி அந்தந்த பகுதியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் நகரசபை நிர்வாகத்தினர் சென்று லாரிகளில் தண்ணீரை அகற்றி அந்த பிரச்சினையை அப்போதைக்கு சரி செய்துவிடுகின்றனர். இந்த அவலநிலை தொடர்பாக டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு சென்று ஏராளமான பொதுமக்கள் புகார் செய்தனர். இந்த நிலையில் வண்டிக்காரத்தெரு மாரியம்மன்கோவில் அருகில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி அந்த பகுதியில் பல நாட்களாக குளம்போல் காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியினர் கழிவுநீருக்குள் வாழ முடியாமல் துர்நாற்றத்தை சகிக்க முடியாமல் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து அவர் நகரசபை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். தொடர்ந்து கூறியும் நகரசபை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்களின் குறையை போக்கும் வகையில் கழிவுநீர் தேங்கி நின்ற வண்டிக்காரத்தெரு மாரியம்மன்கோவில் அருகில் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ. அந்த பகுதியில் அமர்ந்து கழிவுநீரை முழுமையாக அகற்றும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று நகரசபை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அருகே ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டம் செய்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நகரசபை அதிகாரிகள் நேரில் வந்து கழிவுநீர் அகற்றும் லாரிகள் மூலம் அந்த பகுதியில் தேங்கிய கழிவுநீரை தற்காலிகமாக அகற்றினர்.

பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்றகோரி எம்.எல்.ஏ. திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்