பல்லடம் அருகே பயங்கர தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.;
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்; ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.
இந்த தீவிபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீ விபத்து
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவரும் இவரது நண்பர் தனபால் ஆகியோர் இணைந்து அதே பகுதியில் நூற்பாலை நடத்தி வருகின்றனர். இந்த நூற்பாலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக இந்த நூற்பாலை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து நேற்று காலை தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர்.எந்திரங்களை வழக்கம்போல் இயக்கி பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு எந்திரத்தில்; திடீரென தீப்பொறி கிளம்பியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த எந்திரம் தீப்பிடித்து எரிந்தது.
ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
இந்த தீ மளமளவென்று அருகில் இருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள் ஆகியவற்றில் பரவியது.. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கும், காமநாயக்கன் பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதற்குள் எந்திரங்கள், பஞ்சு மூட்டைகள், நூல் மூட்டைகள், உள்பட சுமார் ரூ.50 லட்சம்; மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.