பொன்னேரியில் குளித்தபோது தகராறு: தட்டிக்கேட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

பொன்னேரியில் குளித்தபோது தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-01-16 22:16 IST
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள சோழகங்கம் என்றழைக்கப்படும் பொன்னேரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிரம்பியது. இதையடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினமும் ஏராளமானவர்கள் வந்து ஏரியை பார்த்து செல்கின்றனர். இதில் வாலிபர்கள் சிலர் குடிபோதையில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆமணக்கம் தோண்டியை சேர்ந்த 20 பேர் பொன்னேரியில் குளித்து கும்மாளமிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வாலிபர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால், பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்த கோபால்சாமி(வயது 55) என்பவர், அந்த வாலிபர்களை தட்டிக்கேட்டு, அங்கு குளிக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஆமணக்கன் தோண்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (வயது 23), கலியமூர்த்தி மகன் விக்னேஷ்(23), ரவி மகன் ரகு(22) ஆகியோர் கோபால்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கினர். இதையடுத்து அவர் அலுவலகத்திற்குள் சென்று, கதவை பூட்டிக்கொண்டார். அந்த வாலிபர்கள் அலுவலக கதவையும், ஜன்னலையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதில் காயமடைந்த கோபால்சாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், விக்னேஷ், ரகு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்