மீன்சுருட்டி, கோட்டைப்பட்டினம் பகுதிகளில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் பலி

மீன்சுருட்டி அருகே தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பெண் பரிதாபமாக இறந்தார். கோட்டைப்பட்டினம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்ததில் சிறுமி இறந்தாள்.;

Update:2021-01-16 22:27 IST
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்ப நாயக்கன் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி(வயது 45), மகன் தினேஷ்குமார்(22). சேகர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தினேஷ்குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் அய்யப்ப நாயக்கன் பேட்டையில் உள்ள குடிசை வீட்டில் ராஜேஸ்வரி மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் விவசாய கூலி வேலை செய்ததோடு ஆடு, மாடுகளையும் வளர்ந்து வந்தார்‌. கடந்த 13-ந் தேதியன்று இரவு ராஜேஸ்வரி தனது வீட்டில் படுத்து தூங்கினார். அவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்றும் அவர் அருகிலேயே படுத்திருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீட்டின் மண் சுவர் கரைந்த நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டுக்குட்டியும் செத்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார், அங்கு வந்து ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை அடுத்த மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் உடையப்பன். விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு சத்யஸ்ரீ(வயது 10), சுசீலா(7) என 2 மகள்கள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர். தற்போது கொரோனா விடுமுறை காரணமாக வீ்ட்டில் இருந்து வந்தனர். கடந்த 4 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. உடையப்பன் வீட்டு மண்சுவரும் மழையில் நனைந்து ஈரமாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டு சுவற்றின் ஓரமாக சத்யஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது மண் சுவர் திடீரென இடிந்து சத்யஸ்ரீ மீது விழுந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் பார்வையிட்டு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்