மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் தொடர் மழை: தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கிய நெற்கதிர்கள்

மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வயலில் தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-01-16 22:45 GMT
மீன்சுருட்டி, 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவாலப்பர் கோவில், காட்டாகரம் (தெற்கு-வடக்கு), முத்துசேர்வாமடம், ராமதேவநல்லூர், வீரசோழபுரம், அய்யப்பன் நாயகன் பேட்டை, குழவடையான், தென்னவநல்லூர், வேம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. அறுவடைக்கு ெநற்கதிர்கள் தயாராக இருந்த நிலையில் தொடர் மழை பெய்தது. இதனால் ெநற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து அழுகி முளைக்க தொடங்கிவிட்டன.

ேமலும் இந்த பகுதியில் நிலக்கடலை பயிரிட்ட நாள் முதல் தொடர் மழை ெபய்து வருவதால், நிலக்கடலை ெசடிகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால், அவை முளைக்காமல் அழுகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் நெல், நிலக்கடலை பயிரிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வேளாண்மைத்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இதுவரை பயிர் சேதங்கள் குறித்து கணக்கிட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

இதேபோல் தா.பழூர் டெல்டா பாசன பகுதி முழுவதும் சுமார் 5 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பருவத்தில் பயிரிட்டு, ஓரிரு நாட்களில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்த நெற்பயிர்கள், மழையால் வயல்களை சூழ்ந்துள்ள தண்ணீரில் மிதக்கின்றன. நன்கு முற்றிய நெல்மணிகள் நீரில் கிடப்பதால் தண்ணீரிலேயே முளைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், வைக்கோல் போன்றவற்றை வயலிலேயே அடுத்த சாகுபடிக்கு உரமாக போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையாகவும், காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சதவீத தொகையையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்