காணும் பொங்கலை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்த பொதுமக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் குவிந்தனர். இதில் கூட்டமாக அமர்ந்திருந்தவர்களை போலீசார் வெளியே அனுப்பினர்.;
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று காலையிலேயே பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று ஏராளமானவர்கள் குடும்பத்துடன் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சுற்றுலாவாக வந்து செல்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பொதுமக்கள் வழிபட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர். உள்பிரகாரத்தில் அவர்கள் கூட்டம், கூட்டமாக குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களிடம் கூட்டமாக இருப்பதை தவிர்க்குமாறு கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர்.
தேங்கி கிடந்த தண்ணீர்
மேலும் தொடர் மழையின் காரணமாக கோவிலுக்கு செல்லும் நடைபாதை மற்றும் பிரகாரத்தின் வெளிப்புறங்களில் பொதுமக்கள் அமரக்கூடிய புல் தரைகளில் மழைநீர் தேங்கியிருந்தது. கோவிலின் முகப்பு பகுதியிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் அனைவரும் தண்ணீரில் நடந்து கோவிலுக்கு உள்ளே செல்ல வேண்டிய நிலை இருந்ததால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.