கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி

கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.

Update: 2021-01-17 05:53 GMT
கடலூர், 

சீனாவின் உகான் மாநிலத்தில் உருவான கொடிய வைரசான கொரோனா உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரசால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வையும் புரட்டி போட்டு விட்டது.

இதனால் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கின. இதில் பல்வேறு நாடுகளின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

கோவிஷீல்டு

அதன் அடிப்படையில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. அதேபோல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

7, 800 டோஸ்

இதையடுத்து இந்தியா முழுவதும் 16-ந்தேதி (அதாவது நேற்று) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிஷீல்டு தடுப்புமருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் தமிழகத்துக்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டு மருந்துகள் வந்தது. இதையடுத்து அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்துக்கு 7ஆயிரத்து 800 டோஸ் கோவிஷீல்டு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது.

தடுப்பூசி போடும் பணி

அவை கடலூர் பீச்ரோட்டில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பதன சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கு மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்டத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த, முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்க நிகழ்ச்சி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூரில் 25 பேர்

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கலந்து கொண்டு, மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு தலைமை மருத்துவர் பரமேஸ்வரி, முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர் உள்பட மொத்தம் 25 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள தனி அறையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா? என டாக்டர்கள் சுமார் 30 நிமிடம் கண்காணித்தனர். அதன் பிறகே தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்கள் பாலகுமரன், ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜா முத்தையா மருத்துவமனை

இதேபோல் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், துணைவேந்தரின் ஆலோசகர் என்.சிதம்பரம் ஆகியோரின் ஆலோசனைப்படி புல முதல்வர் மிஸ்ரா குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 65 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நிர்மலா, துணை கண்காணிப்பாளர்கள் ஜெயஸ்ரீ, கோபிகிருஷ்ணா, சமூகநலத்துறை துறைத்தலைவர் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுதவிர சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 30 பேரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 13 பேரும் என மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 133 முன்கள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்