அழகாபுரி அணையில் தண்ணீர் திறப்பு: கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 28 அடி ஆகும்.

Update: 2021-01-17 22:05 GMT
சமீபத்தில் அழகாபுரி மற்றும் சுற்றுவட்டார நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் அழகாபுரி அணையின் நீர்மட்டம் படிப்படியாக 26 அடியாக உயர்ந்து வந்தது. கடந்த 16-ந்தேதி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 500 கன அடி தண்ணீர் திறந்து விட்டனர். அந்த தண்ணீர் குடகனாறு வழியாகச் செல்கிறது. குடகனாறு திண்டுக்கல் மாவட்டம் தாண்டி கரூர் மாவட்டத்தில் பண்ணப்பட்டி, ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், நாகம்பள்ளி சென்று மூலப்பட்டி என்ற இடத்தில் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் அமராவதி ஆற்றில் கலக்கிறது.

 இவ்வாறாக கரூர் மாவட்டத்தில் குடகனாறு மற்றும் ஆங்காங்கே பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் மூலமாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் கரூர் மாவட்டத்தில் பண்ணப்பட்டி பெரிய மஞ்சுவளி, ஆத்துமேடு, புங்கம்பாடி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், நாகம்பள்ளி, கொடையூர், மூலப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்