ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றம்

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டது.

Update: 2021-01-18 23:23 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பள்ளி திறக்கப்படாமல் இருந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பெருக்கெடுத்த மழை நீர் மற்றும் அருகில் உள்ள ஏரி நிரம்பி, அதில் இருந்து வெளியேறிய உபரிநீர் பள்ளி வளாகத்தில் புகுந்து குளம்போல் தேங்கியது. தண்ணீர் குறைவாக தேங்கியிருந்த பகுதிகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தன.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் அந்த பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பா.ம.க. போராட்டம் ஒத்திவைப்பு

இதனால் மழைநீரை அகற்றாததை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தப்போவதாக, பா.ம.க.வினர் நேற்று முன்தினம் அறிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவோடு, இரவாக செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேங்கிக்கிடந்த மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மின் மோட்டார் மூலம் மழைநீர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நடத்த இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பா.ம.க.வினர் அறிவித்தனர்.

மேலும் அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன் தலைமையில் நகர செயலாளர் மாதவன் தேவா உள்ளிட்ட கட்சியினர் பலர், நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் ஆகியோரிடத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தனர்.

கோரிக்கை மனு

அந்த மனுவில், செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேங்கிக்கிடந்த மழைநீரை அகற்றியதற்காக அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ேமலும், இனிவரும் காலங்களில் பள்ளிக்குள் மழைநீர் மறுபடியும் தேங்காமல் இருக்க, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரை வடிகால் வசதி ஏற்படுத்தி மாற்றுப்பாதைக்கு திருப்பிவிட வேண்டும். ஏரி மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். பள்ளிக்கு முன்பாக கிராவல் மண் கொட்டி நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் அதிகாரிகள் நிறைவேற்றி தர வேண்டும். இல்லாத பட்சத்தில் பா.ம.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என்று கூறப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றும், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்