ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல் சம்பவத்தில் 35 பேர் மீது வழக்கு; 11 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல் சம்பவத்தில் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.;

Update:2021-01-20 01:38 IST
கோப்புப்படம்
ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர்பட்டிணம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக சூசையப்பர்பட்டிணம், சூரியமணல் ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் ஒரு தரப்பில் குழந்தைவேல்(38) உள்பட 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு தரப்பில் மணிகண்டன்(28) உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து இரு கிராம மக்களிடையே அச்சத்தை தவிர்க்கும் பொருட்டு சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்யும் வகையில், சூசையப்பர்பட்டிணம் மற்றும் சூரியமணல் கிராமத்தில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். சூரியமணல் கிராமத்தில் இருந்து திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கிய ஊர்வலத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் போலீசார் நடந்தே சென்று சூசையப்பர்பட்டினம் கிராமத்தை அடைந்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுத்து, கைது செய்யும் ஒத்திகை நிகழ்ச்சியும், நடைபெற்றது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது குறித்து போலீசார் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், மலைச்சாமி, மணவாளன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், முருகன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்