தா.பழூா் அருகே வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தா.பழூா் அருகே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

Update: 2021-01-22 02:09 GMT
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நெல் மணிகள் தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கி, வயல்களில் நெற்பயிர்கள் முளைத்து வீணாகியுள்ளது. அதிகாரிகள் சரியான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விவசாய சங்கத்தினர் பாதிக்கப்பட்ட வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கிளை பொறுப்பாளர்கள் கஜேந்திரன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன் கண்டனம் தெரிவித்து பேசினார். மாவட்ட துணை தலைவர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் அபிமன்னன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் வயலில் இறங்கி நெற்பயிர்களை கைகளில் எடுத்துக்காட்டி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்