தா.பழூர் அருகே இரு தரப்பினர் மோதல்; பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது - போலீசார் குவிப்பு
தா.பழூரில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பயங்கர ஆயுதங்களுடன் தப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.;
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகன் அசோக்குமார் (வயது20) கரும்பாயிரம் மகன் விக்னேஷ் (24) ஆகியோருக்கும், தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த பச்சமுத்து மகன் ராமநாதன் (20), முத்துசாமி மகன் கவுதம்(25) , ராஜலிங்கம் மகன் ஜான்(24), முருகன் மகன் கவிமணி (21) ஆகியோருக்கும் தா.பழூர் மேலத்தெருவில் திடீரென பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது அசோக்குமார் தரப்பினரை ராமநாதன் தரப்பினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் தா.பழூர் மேலத்தெருவில் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் தப்பிய 4 பேரையும் பிடிக்க தீவிரம் காட்டினர்.
அப்போது வாலிபர்களை தாக்கிய ராமநாதன், கவுதம், ஜான், கவிமணி ஆகியோர் அரியலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மதனத்தூர்-நீலத்தநல்லூர் சோதனைச் சாவடியை கடந்து கொள்ளிடம் பாலம் வழியாக தஞ்சை மாவட்டத்திற்குள் சென்றபோது தஞ்சை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சுவாமிமலை போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
பின்னர், சுவாமிமலை போலீசார் இதுதொடர்பாக மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா மற்றும் அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோரின் உத்தரவின்பேரில் அவர்கள் 4 பேரும் தா.பழூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் தா.பழூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, வீச்சரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களும், காயம் அடைந்தவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் தா.பழூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் சுமார் 100 பா.ம.க.வினர் அங்குள்ள போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர்.
அரியலூர் உதவி சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பா.ம.க.வினர் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தா.பழூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.