அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தக்கோரி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2021-01-31 05:36 GMT
திருச்சி, 

போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் பணிமனை அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

போராட்டத்தில் தொ.மு.ச. கண்டோன்மெண்ட் கிளை தலைவர் சீனிவாசன், செயலாளர் கல்யாணகுமார், பொருளாளர் ராஜேதிரன், புறநகர் கிளை செயலாளர் சந்திரசேகர், தொ.மு.ச. போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் குணசேகரன், சி.ஐ.டி.யூ. கிளை செயலாளர் கார்த்திகேயன், டி.டி.எஸ்.எப். கிளை செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

இதுபோல், லால்குடி கிளை மாந்துறையில் உள்ள பணிமனை முன் நடந்த போராட்டத்துக்கு தொ.மு.ச. லால்குடி கிளை தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. திருச்சி மண்டல துணைத்தலைவர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். 

இதுபோல உப்பிலியபுரத்தில் உள்ள பணிமனை முன் கூட்டமைப்பு சார்பாக பழனிப்பன், சோமசுந்தரம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. முசிறி பணிமனை முன் தொ.மு.ச. தலைவர் மனோகரன் தலைமையிலும், மண்ணச்சநல்லூர் பணிமனை முன் தொ.மு.ச. செயலாளர் விஜயகுமார் தலைமையிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்