பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-01-31 05:44 GMT
விருதுநகர்
முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 பட்டா மாறுதல்
 மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு கடந்த காலங்களில் நேரடியாக கிராம நிர்வாக அதிகாரியிடமும், தாலுகா அலுவலகம் சென்று விண்ணப்பம் கொடுத்து வந்த நிலையில் தற்போது இது நடைமுறையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க அரசு ஆன்லைன் முறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்யவும் அதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டா மாறுதலில் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
தாமதம்
 தற்போதுள்ள நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இருந்து நிலம் கிரையம் பெற்ற விவரங்கள் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 இதன் அடிப்படையில் நிலம் கிரையம் பெற்றவர்கள், பட்டா மாறுதலுக்கு உடனடியாக உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஆன்லைன்மூலம்விண்ணப்பிக்கின்றனர். ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பதில்லை.
முடக்கி விடும் நிலை 
 கிராம நிர்வாக அதிகாரியை நேரடியாக சென்று சந்தித்து மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டிய நிலை பரவலாக உள்ளது.
அவ்வாறு வலியுறுத்தினாலும் பல்வேறு காரணங்களை கூறி விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்வதற்காக சர்வேயர் வரவேண்டும் என்ற காரணத்தை கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை முடக்கிவிடும் நிலையும் ஏற்படுகிறது.
அவசியம் 
 இதனால் அரசு என்ன காரணத்திற்காக ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியதோ அதன் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.
பட்டாமாறுதலுக்கு விண்ணப்பித்தவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாறுதலுக்கான நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அதிகாரிக்கும் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதில் தாமதமாகும் பட்சத்தில் அதற்கான காரண காரியத்தை கண்டறிந்து தாமதம் செய்யும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் செய்திகள்