வந்தவாசி அருகே செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

வந்தவாசி அருகே செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

Update: 2021-01-31 12:09 GMT
வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இரவு நேரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் செல்போன் டவர் அமைக்க சென்னாவரம் ஊராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. கோபுரம் அமைத்தால் சிட்டுக்குருவி இனம் அழிந்துவிடும். மேலும்  முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள் கூறி, வந்தவாசி -மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இது சம்பந்தமான மனுக்களை வந்தவாசி தாலுகா அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கொடுக்குமாறு போலீசார் கூறினர். 

அதற்கு. பொதுமக்கள் இதற்கு உடனடி தீர்வு எட்டப்படவில்லை என்றால் தாலுகா அலுவலகத்திலேயே வந்து தங்கிவிடுவோம் எனக்கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்