நெய்வேலியில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி மர்மசாவு

நெய்வேலியில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-31 19:15 GMT
நெய்வேலி.

நெய்வேலி 4-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் வேலாயுதம்(வயது 47). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள நகர நிர்வாக அலுவலகத்தில் சுகாதார பிரிவில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இவர் நேற்று முன்தினம் இரவு நெய்வேலி 2-வது வட்டத்தில் உள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் கருத்தடை சிகிச்சை மையத்தில் உள்ள ஒரு அறையில் வேலாயுதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலாயுதத்தின் உடலை கைப்பற்றி என்.எல்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுபற்றி அறிந்த வேலாயுதம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என்.எல்.சி. மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இறந்த வேலாயுதம் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து என்.எல்.சி. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி கொள்ளலாம் என்றனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

வேலை 

இந்த நிலையில் என்.எல்.சி. தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க நிர்வாகிகள், எஸ்.சி., எஸ்.டி. நலப் பணியாளர் சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் வேலாயுதம் உறவினர்கள், என்.எல்.சி. நகர நிர்வாக முதன்மை பொது மேலாளர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேலாயுதம் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர தன்மையற்ற வேலை வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்