புதிய டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பாண்டமங்கலத்தில் புதியதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-02-01 03:47 GMT
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் பாண்டமங்கலம் சேவல்‌கட்டுமூலை‌ அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதி உள்ளது. இந்த பகுதியில் மாதவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நேற்று திடீரென புதியதாக டாஸ்மாக் கடை, பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. 
புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பரமத்திவேலூர்-ஜேடர்பாளையம் சாலையில திரண்டனர். பின்னர் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடையை அகற்றக்கோரியும் சாலை‌ மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரங்கநாதன் உத்தரவின்பேரில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை அங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு எடுத்து சென்றனர். 
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக பரமத்திவேலூர்-‌ஜேடர்பாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்