கந்தம்பாளையம் அருகே குட்டையில் கறிக்கடைக்காரர் பிணம் போலீசார் விசாரணை

கந்தம்பாளையம் அருகே மழைநீர் குட்டையில் கறிக்கடைக்காரர் சாக்குப்பையில் கட்டி வீசப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-02-01 05:33 GMT
கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் ஆவாரங்காடு பகுதியில் அருந்ததியர் காலனி மயானம் உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் சேமிப்பு குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் சாக்குப்பையில் ஆண் பிணம் மூட்டையாக கட்டி வீசப்பட்டு கிடப்பதாக நல்லூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்ேபரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வேலூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திடுமல் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூட்டையில் பிணமாக கிடந்தவர் சோழசிராமணியை சேர்ந்த ஞானசேகர் மகன் சரவணன் (வயது 36) என்பதும், தந்தை-மகன் சேர்ந்து சோழசிராமணியில் கறிக்கடை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. 

கள்ளத்தொடர்பு

சரவணனுக்கு திருமணமாகி சுமதி (29) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 28-ந் தேதி மாலை வீட்டை விட்டு சென்ற சரவணன் 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சரவணனுக்கும், ராமதேவம் செட்டியாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்று 2, 3 நாட்கள் கழித்து வந்ததாகவும் தெரிகிறது. 

இதனால் சரவணன் கள்ளத்தொடர்பு உடைய பெண் வீட்டில் இறந்திருக்கலாம் என்றும், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதையொட்டி அந்த பெண்ணும் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கறிக்கடைக்காரர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்