மத்திய பட்ஜெட்; தூத்துக்குடி பொதுமக்கள் கருத்து

மத்திய பட்ஜெட் குறித்து தூத்துக்குடி பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-02-01 16:19 GMT
தூத்துக்குடி:

மத்திய பட்ஜெட் குறித்து தூத்துக்குடி பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மத்திய பட்ஜெட்

மத்திய அரசு பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்புகள் குறித்து தூத்துக்குடி மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் ஜோ பிரகாஷ்:- 
மத்திய அரசின் பட்ஜெட்டில் தொழில் மற்றும் வர்த்தக துறை மேம்பாட்டுக்கு ரூ.27 ஆயிரத்து 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க ஏதுவாக அமையும். 

சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதும், புதிய தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதும் வரவேற்கத்தக்கது.

புதிதாக 100 சைனிக் பள்ளிகள் தொடங்குதல், 15 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்படுவதும், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு இருப்பதும், பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டத்துக்கு ரூ.64 ஆயிரத்து 180 கோடி ஒதுக்கி இருப்பதும் வரவேற்கத்தக்கது. 

விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு, 75 வயதுக்கு மேற்பட்டடவர்களுக்கு வருமானவரி விலக்கு, மும்பை முதல் கன்னியாகுமரி வரை புதிய தொழில் வழித்தடம் அமைப்பது வரவேற்கத்தக்கது ஆகும். 

6 தூண்கள்

தூத்துக்குடியை சேர்ந்த ஆடிட்டர் பிரான்சிஸ் அமல்ஜார்ஜ்:- 

மத்திய அரசின் பட்ஜெட் 6 தூண்களை அடிப்படையாக கொண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. சுகாதாரம், கல்வி, உணவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

தடுப்பூசி, நர்சிங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மீன்வளத்துறைக்கு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சாலை வசதிக்கு தமிழ்நாடு, கேரளா, அசாம் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. குடிநீர் திட்டம், மாசுகட்டுப்பாடு போன்ற மக்களை நம்பி, மக்களை சார்ந்த திட்டங்களை அறிவித்து உள்ளார்கள். கொரோனாவுக்கு பிறகு மீட்டெடுக்கும் பட்ஜெட்டாக அமைந்து உள்ளது வரவேற்கத்தக்கது.  

சாதாரண மக்களுக்கு..

தூத்துக்குடியை சேர்ந்த பிரேம்குமார்:-

மத்திய பட்ஜெட்டில் 7 ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. 2 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகின்றன. தனிப்பட்ட நபர்களுக்கு கூடுதல் திட்டங்கள் அறிவித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். 

விவசாயிகளுக்கு ரூ.16.5 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் சாதாரண மக்களுக்கான சிறப்பான பட்ஜெட்டாக அமைந்து உள்ளது.

தூத்துக்குடி இந்திய வர்த்தக தொழிற்சங்க செயலாளர் கோடீஸ்வரன்:-
மத்திய அரசு பட்ஜெட்டில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி கழகத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவது, பழைய மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் காற்று மாசை குறைக்க புதிய திட்டம் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. 

இதன் மூலம் சுற்றுப்புற சூழல் மாசுபடுவது குறையும். நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூ.1.41 லட்சம் கோடியில் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக நலிந்து இருக்கும் விவசாயிகளுக்கு விவசாய கடன் தர இருப்பது வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும் உள்ள அகல ெரயில் பாதைகள் 2023-ம் ஆண்டுக்குள் மின்மயம் ஆக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவது குறையும். போக்குவரத்து நேரமும் சேமிக்கப்படும்.

 தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்க ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வது வரவேற்கத்தக்கது. இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் வரவேற்கத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்