தா.பழூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்த கிராம மக்கள்; ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

தா.பழூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்த கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2021-02-02 00:08 IST
தா.பழூர்,

முற்றுகையிட முயற்சி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு குடிநீருக்கான ஆழ்துளை கிணறு பழுதானது. பழுதை சரி செய்து தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நோக்கி மேலமைக்கேல்பட்டி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து, குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்ேபாது, குடிநீர் பிரச்சினையை சரி செய்ய வேண்டும், என்று ேகாஷங்களை எழுப்பினா். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை நிறுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படும்
இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஸ்ரீதேவி முன்னிலையில் கிராம முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்