ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகை- ரூ.1 லட்சம் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே ஆசிரியை வீட்டில் கதவின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை- ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-02-01 19:57 GMT
ஜெயங்கொண்டம்,

ஆசிரியை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் தாய் தமிழ் பள்ளிக்கூட தெருவில் வசிப்பவர் கொளஞ்சியப்பன்(வயது 60). ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஹேமலதா. பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சபரீஸ்வரன்(16) என்ற மகன் உள்ளார். இவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொளஞ்சியப்பன், ஹேமலதா ஆகியோர் தஞ்சாவூருக்கு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த சபரீஸ்வரன், வீட்டை பூட்டிவிட்டு வாரியங்காவலில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு சென்று இரவில் தங்கியுள்ளார்.
25 பவுன் நகைகள் திருட்டு
இந்நிலையில் நேற்று காலை உறவினர் ஒருவர், கொளஞ்சியப்பனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சபரீஸ்வரனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த சபரீஸ்வரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 2 கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததும், 3 பீேராக்களின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததும், ஒரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மற்றும் 25 பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
இதில், நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து மற்றொரு அறை கதவின் தாழ்ப்பாளுக்கான கொண்டியை அறுத்து உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்குள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் வளையல், மோதிரம், சங்கிலி, தோடு உள்ளிட்ட 25 பவுன் நகைகளையும் திருடிச்சென்றுள்ளனர், என்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த நாய் வீட்டிற்கு அருகே உள்ள தறி கொட்டகையில் சென்று படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் திருட்டு சம்பவங்களால் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்