திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; விடிய, விடிய போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் விடிய, விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-02-01 23:03 GMT
தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை  ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் கார், பஸ், லாரி, வேன் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

தூத்துக்குடியில் இருந்து கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடுக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்த லாரி இரவு 7 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது பழுதாகி நின்றது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து அங்கு நள்ளிரவு 12 மணி அளவில் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடந்தது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் லாரியை தள்ளி ரோட்டோரமாக நிறுத்தினர். அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன. லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் விடிய, விடிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பயணிகள் அவதி

இதனால் இரவு நேரம் கடும் குளிரில் பயணிகள் உணவு, தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகளை வைத்திருந்த பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் போக்குவரத்தை சீர் செய்ய போதிய எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்பட வேண்டும். மேலும் பழுது ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் லாரியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்