காஞ்சீபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

10 மாதங்களுக்கு பின்னர், காஞ்சீபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.;

Update:2021-02-02 09:32 IST
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதிய தொகை, வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய 174 மனுக்கள் வரப்பெற்றன. இம்மனுக்களின் மீது மேல் நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆர்.சுமதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி, கலெக்டரிடம் நேரடியாக தங்கள் குறைகளை மனுவாக வழங்கினர் மொத்தம் 169 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெறபட்ட நிலையில், ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்தார்

இதனை தொடர்ந்து 171 பயனாளிகளுக்கு ரூ.62.15 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜான்லூயிஸ் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகள் அடங்கிய 211 மனுக்களை அளித்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் 82 மாற்றுத்திறனாளிகளுக்கு 10 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாலகுரு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் மற்றும் அரசு அலுவலர்கள் ஸ்ரீநாத் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்