சாலைமறியல் செய்ய முயன்ற 98 அரசு ஊழியர்கள் கைது

தேனியில் சாலை மறியல் செய்ய முயன்ற அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 98 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-02 11:43 GMT
தேனி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். 
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி, தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று  காலை திரண்டனர். 

அங்கு அவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

தள்ளுமுள்ளு

இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமகிருட்டிணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

 ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன், நிதி காப்பாளர் அன்பழகன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜவேல், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

 இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர், அவர்கள் தொழிற்பயிற்சி நிலையம் முன்பு சாலை மறியல்  செய்ய முயன்றனர். அப்போதும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதனால், போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து  80 பெண்கள் உள்பட 98 அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து அவர்கள் அனைவரும் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்