நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலைமறியல் 27 பேர் கைது

நாகர்கோவிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-03 00:11 GMT
நாகர்கோவில், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் 3½ லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் உள்ள 4½ லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் குமரி மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது.  சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  

மூட்டா முன்னாள் மாநில தலைவர் மனோகர ஜஸ்டஸ், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் லீடன்ஸ்டோன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கிறிஸ்டோபர் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். 

இதையடுத்து அரசு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்புறமுள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதில் 6 பெண்கள் உள்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் அரசு பஸ்சில் ஏற்றி ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்த மறியல் போராட்டத்தையொட்டி நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாயிலில் நாகர்கோவில் துணை சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்ற அனைவரையும் சோதனை செய்தபிறகே அனுமதித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகப் பகுதி பரபரப்புடன் காட்சி அளித்தது. 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 27 அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 
ஆனால் 15-க்கும் அதிகமான ஊழியர்கள் தாங்கள் வீட்டுக்கு செல்ல மாட்டோம் என்றும், தங்களை அடைத்து வைத்த மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை. சங்கத்தின் தலைமை கூறிய பிறகு போராட்டம் கைவிடப்படும் என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

மேலும் செய்திகள்