வடிகால் வசதி இல்லாததால் சாலையில் ஓடும் கழிவுநீர்
கழுமங்கலத்தில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது.;
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த கழுமங்கலம் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கழுமங்கலம் வடக்கு தெரு, மேற்கு தெருவில் சரியாக வடிகால் வசதி இல்லாததால் வீட்டில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி சாலையும் சேதமடைகிறது. அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது, சாலையில் நடந்து செல்பவர்கள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
வடிகால் வசதி
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தரவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரம் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.