பெண்ணை தாக்கி நகை பறிப்பு

பெண்ணை தாக்கி நகை பறித்த வாலிபர் பிடிபட்டார்;

Update:2021-02-12 21:09 IST
பரமக்குடி, 
பெண்ணை தாக்கி நகை பறித்த வாலிபர் பிடிபட்டார்.

7 பவுன் நகை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பட்டாபி சீதாராமய்யர் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி சர்மிளா (வயது42).இவர் நேற்று காலை அவரது வீட்டை கூட்டி கொண்டு இருந்தார். அப்போது கொழுந்துைற கிழக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் திருமுருகன்(38) என்பவர திடீரென சர்மிளாவின் வீட்டுக்குள் புகுந்து. அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்துள்ளார். 
உடனே சர்மிளா கூச்சலிட்டார். இதையடுத்து அவரை கத்தவிடாமல் திருமுருகன் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது சர்மிளாவின் வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் மாதவராமன் என்பவர் கீழே இறங்கி வந்து ள்ளார். 
அப்போது திருமுருகன் சர்மிளாவின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை தொடர்ந்து அவர் சத்தமிட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த லோகநாதன், நாகராஜன், ஏகாம்பரம் ஆகியோருடன் திருமுருகனை பிடித்து வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்தனர். 
விசாரணை

அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்ற திருமுருகன் கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது.  இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அப்பகுதி மக்கள் திருமுருகனுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருமுருகனை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நகர் போலீசார் வழக்கு பதிந்து திருமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்